Monday, July 21, 2008

அவன்... அவள்... - 1

வழக்கம் போல் இன்றும் என் வேலை தொடங்கியது. எனது வேலை மிக அத்தியாவசியமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் எனது பணி மிக அத்தியாவசியம். அதனால் என் வேலை எப்பொழுதும் இருக்கும். 24 மணி நேரம் வேலை பலு நிறைந்திருக்கும் ஒரு துறை. எனது நண்பர்கள் 8 மணி நேரம் வேலை செய்து விட்டு வீட்டிற்கு செல்லும் சமயங்களில் என்னை கண்டு செல்வதுண்டு. என் வேலை மனித வாழ்வில் ஒரு அங்காமாவாதால் அவர்களின் பார்வை எனக்கு ஏளனமாகத் தெரியவில்லை. மாறாக எனக்கு பெருமிதத்தை தந்தது.

என் உழைப்பின்றி எந்த ஒரு மனிதனும் அவர்கள் வீட்டில் இருப்பது கொஞ்சம் சிரம்மமே. என் உழைப்பைச் சாராது எந்த ஒரு மனிதனும் இருந்ததில்லை. அப்படி என்ன வேலை செய்கிறாய் என்று நீங்கள் கேக்கலாம். சொல்கிறேன். அதற்கு முன் கேளுங்கள் என் வழி கண்ட காதல் கதையை.

கதிரவன் என்னுடன் வாழ்பவன். அவன் குடும்பமும் என்னுடன் வாழ்ந்து வருகிறார்கள். என் வீடாக இருந்தாலும் அது அவர்கள் வீடாக எண்ணி வாழும் குடும்பம். என் மேல் எப்பொழுதும் ஒரு தனி அக்கறை. ஏனெனில் அவர்களின் பார்வை என் வழி கண்டதே.

பிறை எங்கள் வீட்டின் அருகாமையில் வாழும் ஒரு தேவதை. அவள் வீதியில் வர ஊரே தேர் உலா கண்டு மகிழும் அழகுடையவள். ஆயிரம் மல்லிகை மலர்கள் ஒன்று கூடி கட்டிய ஒரு வசந்த வானவில். ஆவலுடன் பேச தவம் கிடந்தவர் பலர். கதிரவனும் தான்.

கதிரவனுக்கு எப்பொழுதும் அவள் மேல் ஒரு தனி பிரியம். அவளுடன் இன்று வரை ஏதும் பேசியது இல்லை என்றாலும் அவள் தன்னை காதலிப்பதாய் எண்ணி மகிழ்வான். பேசலாம் என்று நினைத்தபோதும் அவளின் பார்வை அவனை ஊமை மொழி மட்டுமே உரைக்க செய்யும். அவளும் ஒன்றும் குறைந்தவள் இல்லை. யார் பார்த்தாலும் தலை நிமிரா வண்ண மயில் இவனை கண்டால் மட்டும் புன்னகை தோகை விரிப்பாள். புன்னகைத்த கணத்தில் என் கண்பட இவன் துடித்த கணங்கள் பல.

காதல் அவன் மனதில் சுடர்விட பூக்களாய் அவன் மலர துவங்கிய காலம் அது .ஆம் வசந்த காலம் போல் அது அவனுடைய காதல் காலம். யாரும் அறியா கனவு காலம்.

என்னை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் அறையில் நான் தான் சிறந்தவன். எத்தனை நண்பர்கள் என் போன்று இருந்தாலும் எனக்கென அவன் இதயத்தில் எப்பொழுதும் தனி இடம். அவனுடைய கவிதைகள், கதைகள் அத்தனையிலும் நான் அடக்கம் ஒரு நண்பனாய். அவன் காதல் உணர்வுகளின் ஒளியை பலமுறை என்னுடன் பகிர்ந்து இருக்கிறான். அன்றே முடிவு கொண்டேன், என்றேனும் இவனுக்கு தூதாய் நாம் என்று. வருத்தம் இல்லை மாறா குளிர்ந்த புன்னகை.

ஒரு வாரம் கதிரவன் வெளியூர் செல்ல வேண்டிய நிலை. உயிர் நண்பனை பிரியும் சோகம் என்னுள். பிறையை பிரியும் சோகம் அவனுள். நாட்கள் 6 ஆயிற்று. எப்படியும் அவளிடம் பேசி கதிரவனுடன் பேச வைக்க வேண்டும் என்று எண்ணினேன். மாலை சந்திக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். சாலையை நோக்கி காத்திருந்தேன். அவள் என்னை கடக்கும் தருணம் வந்தது.

தூரத்தில் கண்ட பிறை நிலவின் ஒளியாய் காட்சி தந்தாள். பிரகாசம் கண்ணை கூசினாலும் விழி மூடாமல் அவளை பார்க்க வைத்தது. நானும் மௌனம் ஆனேன். என்னைப் பார்த்து கண் சிமிட்டி சென்றாள். எது எப்படியோ அவள் கதிரவனுக்கு நல்ல துணை என்று அறிந்தேன். என்ன செய்ய. நான் வாய் திறப்பதற்குள் அவள் வீட்டு வாயிலை அடைந்தாள். மறுநாள் அவள் நிச்சயம் என்னை பார்ப்பாள். கதிரவனுடன் சந்திக்கலாம் என்று காத்திருந்தேன். மறுநாளும் வந்தது.. கதிரவனின் வரவால்.

தொடரும்...

0 comments: